இந்தியாவில் முதல் பத்து ரூபாய் நாணயம் 2005ம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு, 2006ம் ஆண்டு பொதுமக்கள் புழக்கத்துக்கு வந்தது. இது நாட்டின் முதல் இரு உலோக நாணயமாகும். மையப் பகுதி செம்பு-நிக்கல் கலவையால் ஆனது; வெளிப்புற வளையம் அலுமினியம்-வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. 7.71 கிராம் எடையுடைய இந்த நாணயம் 27 மில்லிமீட்டர் விட்டம் கொண்டது.
இந்த நாணயம் அறிமுகமானதிலிருந்து, குறைந்தது 14 விதமான வடிவமைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அவ்வப்போது புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தி வந்தாலும், அனைத்து வடிவங்களும் சட்டப்பூர்வமாகவே உள்ளன. 2011ம் ஆண்டில் ரூபாய் சின்னம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. அதற்கு முன் வெளியிடப்பட்ட நாணயங்களில் இந்தச் சின்னம் இடம்பெறாததால், சிலர் பழைய நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய பத்து ரூபாய் நாணயங்கள் மீண்டும் அதிகம் பரவியதால், அவை செல்லாது என்ற வதந்தி பரவியது. ஆனால், இது முற்றிலும் தவறு. ரிசர்வ் வங்கி இதுகுறித்து பலமுறை விளக்கம் அளித்து, ரூபாய் சின்னத்துடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது நமது சந்தையில் நான்கு வகையான பத்து ரூபாய் நாணயங்கள் நடைமுறையில் உள்ளன. வதந்திகளால் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு குழப்பம் ஏற்படுகின்றது. உண்மையில், பழையதும் புதியதும் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருப்பது இயல்பு. எனவே, இந்த நாணயங்களை ஏற்க மறுக்கக் கூடாது. தவறான தகவல்களை நம்பாமல், ரிசர்வ் வங்கி வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.