Monday, December 22, 2025

‘இந்த ஏரியாவுல ரவுடினு ஃபார்ம் ஆயிட்டேன்ய்யா’ – இ.பி.எஸ் ஐ விமர்சித்த ஆர்.எஸ் பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது :

“நானும் ரவுடிய்யா.. இந்த ஏரியாவுல ரவுடினு ஃபார்ம் ஆயிட்டேன்ய்யா” என வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துவது போல எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்.

‘நானும் ரவுடிதான்’ என்பது போல ‘நானும் எதிர்க் கட்சித் தலைவர்தான்’ என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

அதிமுக கட்சியின் பெயரில் உள்ள ‘திராவிடம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று சொன்ன ‘மங்குனி’தானே நீங்கள்.

SIR வழியாகத் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கப் பாசிச பாஜகவும் அடிமை அதிமுகவும் போட்ட சதிக்கு எதிராக திமுக எடுத்துவரும் உறுதிமிக்க நடவடிக்கைகள் பழனிசாமியை ஆட்டங்காண வைத்திருக்கிறது.

ஆட்சியில் இருக்கும் போது டெல்லி பிக்பாஸ்களுக்குப் பயந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தது போல இப்போது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை அடகு வைக்கத் துணிந்துவிட்ட பழனிசாமி SIRக்கு வக்காலத்து வாங்குவது ஆச்சரியமில்லை.

நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட ‘திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி’ என்று பேசுவதால் பழனிசாமிக்கு பதற்றம் ஏற்பட்டுவிட்டது போல. முதலமைச்சரைப் பார்த்து, பாஜகவை விமர்சிக்காமல் எங்களையும் கொஞ்சம் விமர்சியுங்கள் என்று கெஞ்சுகிறார்.

பணமதிப்பிழப்பு தொடங்கி தற்போது SIR வரை அனைத்திலும் அப்பாவி மக்களை அல்லல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கி அதைக் கண்டு ஆனந்தப்படும் பாஜகவையும் அதன் அடிமைகளையும் என்றும் தமிழ்நாடு ஏற்காது என அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News