Tuesday, September 9, 2025

தவெக – வின் எழுச்சியால் பயத்தின் உச்சத்தில் தி.மு.க – விஜய் கடும் தாக்கு

தவெக தலைவர் விஜய், வரும் 13ம்தேதி திருச்சியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிப்பதற்காக பொது செயலாளர் ஆனந்த் கடந்த 6ம்தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அங்கு வந்த தவெகவினர் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகனங்களை நிறுத்தினர். இதனால், வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்தது, போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததும் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் புஸ்ஸி ஆனந்த் உள்பட 6 பேர் மீது நேற்று திருச்சி ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தவெக, தலைவர் விஜய் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது :

“தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.

தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு.

திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, திரு. என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News