டெல்லியில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகம் சீராக நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன. எல்.பி.ஜி. விநியோகத்தைப் பொறுத்தவரை சில கவலைகள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையிலும் எங்களது 25 ஆயிரம் வினியோகஸ்தர்களில் எங்கும் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டதாக தகவல் இல்லை.
எனவே பொதுமக்கள் எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம். கியாஸ் சிலிண்டர்களை பீதியுடன் முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. நாட்டின் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் தற்போது 100 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட திறனில் இயங்கி வருகின்றன. அவற்றில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளது. மேலும் எரிபொருள் விநியோகம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டிற்கான குழாய் வழி இயற்கை எரிவாயு மற்றும் சி.என்.ஜி. தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. எல்.பி.ஜி.யை நம்பியுள்ள நகர்ப்புறங்களில் உள்ள வணிக நுகர்வோர் சந்திக்கும் சவால்களை தீர்க்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி பெரும்பாலும் வீட்டு நுகர்வோருக்கே வழங்கப்படுகிறது. வீட்டு பயன்பாடு அல்லாத துறைகளில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
