மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து வருகிறார். அந்த அடிப்படையில் கடந்த சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, அவருக்கு அனுப்பட்டு இருந்த மசோதாக்களில் 5 மசோதாக்களுக்கு கவர்னர் கடந்த மாதம் 13-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
அதில் இரண்டாவது மசோதா, தமிழகத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அதில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி இனி உயிரி-மருத்துவக் கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) முறையற்று குவித்து பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்துவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும். எனவே மருத்துவ கழிவுகளை இனி கண்டபடி கொட்டக்கூடாது. முறைப்படி அகற்ற வேண்டும். இந்த மசோதா கவர்னர் ஒப்புதல் கொடுத்தவுடன் சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில், நீர் நிலைகள், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் ஜூலை 8ம் தேதி முதல் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பொது இடங்களில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்ற முறையில் குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டுவந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதி, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஆணைக்கு சமமாக விசாரணையின்றி குற்றம் செய்தவரை சிறைவைக்க முடியும்.
இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டு, அத்தகைய நபர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது.