23 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய மனிதக் காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காலடித் தடங்கள் வட அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ நகரில் வறண்டுபோன ஒரு ஏரியில் உள்ளன.
இந்தக் காலடித் தடங்களைப் பனியுகம் முடியும்முன்பே மனிதர்கள் இங்கு குடியேறியுள்ளதன் அடையாளமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது இந்தப் பகுதி நியூமெக்ஸிகோ பாலைவனத்தின் அங்கமாக உள்ளது.
இங்கு இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் காலடித்தடங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளன. பெரியவர்களின் காலடித் தடங்கள் குறைந்தளவாகவே உள்ளன. வரலாற்றுக்கு முந்தைய ஓநாய்கள், பாலூட்டிகள் போன்றவை வந்துசென்றதற்கான தடயங்களையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தடங்கள் கிழக்கு சைபீரியாவிலிருந்து வடஅமெரிக்காவுக்குத் தரைப்பாலம் வழியாக வந்துக் குடியேறியவர்களுடையதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
பூர்வீக அமெரிக்கக் குழுக்களின் முன்னோடிகளான இந்தக் குடியேறிகளே இந்தப் பகுதியிலிருந்த நாகரிகம் மிகுந்த மக்களாகவும் கருதப்படுகின்றனர்.
மனித வரலாறு எங்கிருந்து தொடங்கியது என்பதைக் கண்டறிய உலகம் முழுவதும் உடனே அகழ்வாராய்ச்சிகளைத் தொடங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையே இந்தக் கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன.