மதுரையில் புதிய நீதிக்கட்சி சார்பில் களமிறங்கும் இயக்குனர் சுந்தர்.சி

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

அ.தி.மு.க. – பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. துணை தலைவரான நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதுதொடர்பாக புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி அவர்கள் சன் ஆப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். 30.3.2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.

இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம். இடம் நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News