அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் புற்றுநோயை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு பெரும் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1886-ம் ஆண்டு நியூஜெர்சியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பவுடர், ஷாம்பு, சோப் உள்ளிட்ட பல தயாரிப்புகளை உலகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது. ஆனால், 1999-ம் ஆண்டு டயான் பெர்க் என்ற பெண், இந்த பவுடர் பயன்படுத்தியதால் தான் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.
முன்னதாக, The Lancet மற்றும் அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வுகளிலும், டால்க் பவுடர் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. டயான் பெர்க்-க்கு ஆரம்பத்தில் 12 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நிறுவனத்தினர் முன்வந்தனர். ஆனால், அவர் அதை நிராகரித்து வழக்கை நீட்டித்து வந்தார்.
இதன் அடிப்படையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நுகர்வோருக்கு போதுமான எச்சரிக்கை அளிக்க தவறிவிட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இதுவே அந்த நிறுவனத்திற்கு எதிரான முதல் குற்றவியல் தீர்ப்பாக அமைந்தது. பின்னர் ஆயிரக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டன. 2023-ம் ஆண்டில், பெரும் சர்ச்சைகளின் காரணமாக, டால்க் அடிப்படையிலான பவுடர் தயாரிப்பை நிறுவனம் நிறுத்தியது.
இப்போது, இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம், நிறுவனத்திற்கு 966 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 8,576 கோடியாகும். எனினும், தங்களது தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், புற்றுநோய் அபாயம் இல்லை என்றும் நிறுவனம் வாதிக்கிறது. மேல்முறையீடு செய்யும் எண்ணம் உள்ளதாகவும் ஜான்சன் & ஜான்சன் தெரிவித்துள்ளது.