ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ராணுவ ட்ரோன் தயாரிப்பு செயல்பாடுகளுக்காக பல நாடுகளில் இருந்து முக்கிய ரசாயனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுவதாக அமெரிக்க நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இத்திட்டங்களுக்கு பொருட்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.
சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக சோடியம் குளோரேட், சோடியம் பெர்குளோரேட், செபாசிக் ஆசிட் உள்ளிட்ட முக்கிய ரசாயனங்கள் ஈரானுக்கு அனுப்பப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது. அதேபோல், இந்தியாவின் சந்தீகர் நகரில் உள்ள ‘பார்ம்லேன்’ நிறுவனம் மூலம், யுஏஇ வழியாக ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் மட்டும் இல்லாமல், துருக்கி, ஹாங்காங், ஜெர்மனி மற்றும் உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்களும் ஈரானின் ராணுவ உற்பத்திக்கு பயன்படும் பொருட்களை வழங்கி வந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் எந்த நாடும் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தத் தடை மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும் கூடுதல் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி இஸ்ரேல் ஈரானின் அணு வசதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. பின்னர் ஜூன் 22-ஆம் தேதி அமெரிக்க போர் விமானங்களும் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் போன்ற அணு தளங்களை இலக்காகக் கொண்டு குண்டுவீச்சு நடத்தியது.
இந்த தாக்குதல்களால் ஈரானின் ஏவுகணை கையிருப்பு கணிசமாக குறைந்த நிலையில், ராணுவ ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தியை வேகப்படுத்த ஈரான் பல நாடுகளில் இருந்து அவசியமான ரசாயனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை திரட்டிக் கொண்டிருந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனையே கட்டுப்படுத்தும் முயற்சியாக 32 நிறுவனங்களுக்கு புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
