மும்மொழி கொள்கை எதிர்ப்பால் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வலுக்கிறது. இதனால் திமுக- பாஜகவினர் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் திமுக சார்பில் கண்டன கூட்டங்கள் நடந்து வருகிறது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் பேசியதாவது : “பாஜகவின் மாநில தலைவர் நம்முடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான். காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, மாலை ஒரு பேச்சு.. விடிந்தால் ஒரு பேச்சு என அவர் பேசி வருகிறார்.
அவரிடம் நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். லண்டனில் படிக்கச் சென்றீர்களே.. அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா இல்லை இந்தியில் பேசினீர்களா.. எந்த மொழியில் பேசினீர்கள்? ஏன் அப்போது மட்டும் ஆங்கிலத்தில் பேசினீர்கள் என்பதை நாட்டு மக்களிடம் சொல்லுங்கள்.. அதன் பிறகு மும்மொழி கொள்கை குறித்து நாம் பேசலாம்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.