Wednesday, February 5, 2025

சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத உணவுகள்

நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய்க்கு மரபணு, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாதது என பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை, இரவு உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிக்கக்கூடும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் குறித்து இதில் பார்க்கலாம்.

பழச்சாறுகள், சோடா மற்றும் பிற இனிப்பு பானங்கள் இரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சர்க்கரை பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சூடான நீர், மூலிகை டீ அல்லது சர்க்கரை இல்லாத பானங்களை குடிக்கலாம்.

பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் தர்பூசணி, அன்னாசிப்பழம், வாழைப்பழம் போன்றவை அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இவை ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்வதால், வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிட வேண்டாம்.

சிக்கன், டோனட்ஸ் போன்ற வறுத்த, பொறித்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இதுபோன்ற உணவுகள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி இன்சுலின் அளவை அதிகரிக்கும் என்பதால் இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

நார்ச்சத்து குறைவாக உள்ள வெள்ளை ரொட்டி மாதிரியான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். இதற்குப் பதிலாக நீங்கள் கோதுமை ரொட்டி, ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை சாப்பிடலாம். இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு, உடலுக்குத் தேவையான நார்ச்சத்தையும் வழங்குகிறது.

மேலே சொன்ன உணவு விஷயங்களை கடைபிடிப்பதோடு நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றையும் சர்க்கரை நோயாளிகள் தவறாது மேற்கொள்ள வேண்டும். இது உங்களது உடல், மனநலன் இரண்டுக்குமே உகந்தது.

Latest news