திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே பாலு என்பவர் பெப்ஸ் என்ற பெயரில் கடந்த பத்து வருடங்களாக உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை உணவு அருந்துவதற்கு வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் உணவருந்த சென்றுள்ளார். அங்கு ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து காத்திருந்த நிலையில் தனக்கு பிறகு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் தனக்கு உணவு வழங்கவில்லை என கௌதம் உணவகத்தில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கௌதம் தனது நண்பர்களை செல்போன் மூலமாக அழைத்து உள்ளார். இதனை தொடர்ந்து கௌதமின் நண்பர்கள் ஆறு பேர் அங்கு வந்த நிலையில் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்த கௌதம் உணவகத்தின் சமையல் காரரையும், உணவக காசாளரையும் தாக்கினார். மேலும் அருகில் இருந்த குக்கர் மூடியை எடுத்து தாக்கியதில் காசாளர் ஜாஹிரின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் சேர்ந்து கௌதமை பிடித்தனர்.
மேலும் அங்கு வந்த கௌதமின் நண்பர்கள் 6 பேரும் தப்பி ஓடிய நிலையில் வீரபாண்டி காவல்துறையினரிடம் கௌதமை ஒப்படைத்தனர். உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கௌதம் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உணவகத்தை சேதப்படுத்தியது மற்றும் அங்கிருந்த ஊழியர்களை தாக்கியது ரத்த காயம் ஏற்படுத்தியது, உயிருக்கு ஆபத்தை விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கௌதமை கைது செய்தனர். தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டலை சூறையாடிய வழக்கில் முக்கிய குற்றவாளியான கௌதம், மணிகண்டன், சஞ்சய், சி ஜெய், நவீன் என ஐந்து பேரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர் மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
