கேள்வி கேட்ட அடுத்த நொடி மரணம்! டிரம்பின் நண்பர் சுட்டுக்கொலை! யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்க அரசியலையே உலுக்கிய ஒரு கொடூரமான கொலை சம்பவம் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரும், பழமைவாத இளைஞர்களின் முகமாக அறியப்பட்டவருமான சார்லி கிர்க், பொது மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஆம். தனது 31வது வயதில், யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கண்முன்னே இந்த பயங்கரம் அரங்கேறியுள்ளது.சம்பவத்தன்று, சார்லி கிர்க் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது பார்வையாளர் ஒருவர், துப்பாக்கி வன்முறை குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார். “கடந்த 10 ஆண்டுகளில், எத்தனை திருநங்கைகள் அமெரிக்காவில் வெகுஜன துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு சார்லி கிர்க், “மிக அதிகம்” என்று பதிலளித்தார்.மீண்டும் அந்த நபர், “சரி, கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் மொத்தம் எத்தனை வெகுஜன துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன?” என்று கேட்டார்.அதற்கு கிர்க், “கூட்டமாக நடக்கும் வன்முறைகளையும் கணக்கில் எடுக்க வேண்டுமா?” என்று பதில் கேள்வி கேட்டார்.இந்த வார்த்தைகள் முடிவதற்குள், திடீரென வெடித்தது அந்த ஒற்றைத் துப்பாக்கி குண்டு!

யாரும் சுதாரிப்பதற்குள், சார்லி கிர்க் தனது கழுத்தைப் பிடித்தபடி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த அரங்கம் முழுவதும் மக்களின் அலறல் சத்தமும், பீதியும் சூழ்ந்தது.இந்த செய்தி கேட்டதும், அதிபர் டொனால்ட் டிரம்ப் உடைந்து போயிருக்கிறார். இது “அமெரிக்காவிற்கான ஒரு இருண்ட தினம்” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “சார்லியைப் போல அமெரிக்க இளைஞர்களின் இதயத்தை வேறு யாரும் புரிந்து வைத்திருக்கவில்லை. அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டார், குறிப்பாக என்னால். இப்போது அவர் நம்முடன் இல்லை என்பது பேரதிர்ச்சி,” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும், “சார்லி கிர்க்கின் நினைவாக, அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்கக் கொடிகளும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்” என்றும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இந்தக் கொலை தொடர்பாக ஒருவரைக் கைது செய்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், FBI இயக்குனர் காஷ் படேல், “விசாரணைக்குப் பிறகு அந்த நபர் விடுவிக்கப்பட்டுவிட்டார். உண்மையான கொலையாளி இன்னும் பிடிபடவில்லை. எங்கள் தேடுதல் வேட்டை தொடர்கிறது” என்று அறிவித்திருக்கிறார். இதனால், கொலையாளி யார் என்ற மர்மம் நீடிக்கிறது.

யார் இந்த சார்லி கிர்க்?

தனது 18 வயதிலேயே “Turning Point USA” என்ற அமைப்பைத் தொடங்கி, பழமைவாதக் கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்பி வந்தார். டிரம்பின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த இவர், பல சர்ச்சையான கருத்துக்களால் எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். இவர் பேசவிருந்த இந்த நிகழ்ச்சிக்கு எதிராகக் கூட, சுமார் 1000 பேர் ஆன்லைனில் மனு அளித்திருந்தனர். ஆனால், பேச்சுரிமையை காரணம் காட்டி, பல்கலைக்கழகம் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்திருந்தது.

இன்று, அதே பேச்சுரிமை மேடையில், ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்த போதே அவரது உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசியல் வன்முறைகளின் உச்சகட்டமாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.இந்த கொலையின் பின்னணி என்ன? கொலையாளி யார்? அரசியல் பழிவாங்கலா? என்பதை அறிய ஒட்டுமொத்த அமெரிக்காவும் காத்திருக்கிறது.

Related News

Latest News