தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் ராமகிருஷ்ணப்பூர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லாவண்யா என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் சுரேஷ் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதற்கிடையே, திருமணத்தின்போது லாவண்யாவின் பெற்றோர் ரூ.50 லட்சம் ரொக்கமும், 25 சவரன் நகையும் வரதட்சணையாகக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 16-ம் தேதி தந்தையுடன் பைக்கில் செல்லும் பொழுது ஏற்பட்ட விபத்தில் லாவண்யா படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 24-ம் தேதி சிகிச்சை பலனின்றி லாவண்யா மருத்துவமனையிலேயே இறந்தார்.
இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் லாவண்யாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை ஆம்புலன்ஸ் மூலமாக லாவண்யாவின் கணவர் சுரேஷ் வீட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.
‘திருமணத்தின் போது கொடுத்த வரதட்சணையை திரும்ப கொடுத்தால்தான் சடலத்தை எடுத்துச் செல்வோம்’ எனக் கூறி லாவண்யாவின் தாயார்,உறவினர்களுடன் போராட்டம் நடத்தினார். இரண்டு நாள்களாக போராட்டம் தொடர்ந்த நிலையில், காவல்துறையினர் லாவண்யாவின் குடும்பத்தினரையும், அவரின் தாயாரையும் சமாதானம் படுத்தி இறுதிச் சடங்குகளை செய்ய கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாகத் கூறப்படுகிறது..