Saturday, December 27, 2025

மோந்தா புயல் வேகம் திடீரென அதிகரிப்பு!!

வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில் இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது.

மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும். புயலானது 3 மணிநேரத்திற்கும் மேலாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.

இந்த சூழலில், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 680 கி.மீ. தொலைவிலும் புயலானது நிலை கொண்டிருந்த நிலையில், காலை 8.15 மணி அளவில், சென்னையில் இருந்து 550 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ள புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு, வடமேற்கே நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை தீவிர சூறாவளி புயலாக உருவெடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து அது வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே வருகிற 28-ந்தேதி அதாவது, நாளை மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என்றும் அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மோந்தா புயலின் எதிரொலியாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, நாளை (28-ந்தேதி) ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் கரைக்கு திரும்பும்படி முன்பே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மதியம் 12.30 மணி நிலவரப்படி சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கே புயல் மையம் கொண்டுள்ளது. இந்த சூழலில் புயலின் வேகம் மணிக்கு 16 கி.மீ. என்பதில் இருந்து மணிக்கு 18 கி.மீ. ஆக அதிகரித்து உள்ளது.

Related News

Latest News