Thursday, December 4, 2025

ஜடேஜாவை தாரை வார்க்க CSK முடிவு ! கொந்தளிக்கும் ரசிகர்கள்!

IPL டிரேடு சீசன் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இப்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தி, வெறும் டிரேடு அல்ல, அது ஒரு மெகா டிரேடு. ஒரு அணியின் ஆன்மாவையே விலை பேசும் ஒரு அரசியல் சதுரங்கம். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸுக்குக் கொண்டுவர நடக்கும் இந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில், சிஎஸ்கே ரசிகர்களின் இதயத்தையே உலுக்குகின்ற சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக அனல் பறக்கும் விவாதங்கள் எழுந்துள்ளன.

வதந்திகளின்படி, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே-வுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் கேட்ட டீல், சிஎஸ்கே ரசிகர்களுக்கே ஒரு நிமிடம் தலை சுற்ற வைத்திருக்கும். அவர்கள் கேட்டது, ஜடேஜா, துபே, மற்றும் டெவால்ட் பிரெவிஸ்(Dewald Brevis). இது கிட்டத்தட்ட சிஎஸ்கே-வின் முக்கிய வீரர்களை மொத்தமாக கேட்பது போல் இருந்தது. இதற்கு சிஎஸ்கே நிர்வாகம் உடனடியாக ‘நோ’ சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ராஜஸ்தான் அத்துடன் நிற்கவில்லை. அடுத்ததாக, “சரி, ஜடேஜாவுடன், சிஎஸ்கே-வின் எதிர்கால நட்சத்திரம் பதிரானாவைக் கொடுங்கள்” என்று கேட்டதாக ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. இது, சிஎஸ்கே-வின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் ஒரே நேரத்தில் குறிவைப்பதாக இருந்தது. இந்த டீலையும் சிஎஸ்கே நிர்வாகம் நிராகரித்துவிட்டதாகவே தெரிகிறது.

இங்குதான் அசல் சிக்கலே தொடங்குகிறது. ராஜஸ்தானுக்கு சஞ்சு சாம்சனை விட, ஜடேஜா மீதுதான் அதிகக் கண் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘ஜடேஜா இல்லாமல் எந்த டீலும் இல்லை’ என்ற நிலையில் ராஜஸ்தான் நிற்பதால், சிஎஸ்கே நிர்வாகம் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, ஜடேஜாவுடன், சாம் கர்ரன் அல்லது பதிரானா – இவர்களில் ஒருவரை அனுப்பலாமா என்று சிஎஸ்கே தரப்பில் ஒரு தீவிரமான யோசனை நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதான் சிஎஸ்கே ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ஜடேஜா என்பவர் வெறும் ஒரு வீரர் அல்ல. பலமுறை ஒற்றை ஆளாக போட்டியை வென்று கொடுத்தவர். சிஎஸ்கே-வின் ரத்தமும், சதையும் போன்றவர். அப்படிப்பட்ட ஒரு வீரரை, சஞ்சு சாம்சனுக்காக விட்டுக்கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? கேப்டன் ருதுராஜ் கீப்பிங் செய்யலாம், அல்லது உர்வில் படேல் இருக்கிறார். இவர்களை வைத்து சமாளிக்க முடியாதா? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்புகின்றனர்.

ஏற்கனவே, ஏலத்தின்போது நல்ல வீரர்களை எடுக்காமல் ரசிகர்களை ஏமாற்றுவார்கள். இப்போது, டிரேடு என்ற பெயரில், அணியின் இதயமான வீரரையே கொடுத்து ரசிகர்களை மேலும் சோதிக்கிறார்கள் என்பதுதான் பலரின் ஆதங்கமாக உள்ளது. இந்த டிரேடு வதந்திகள் வெறும் வதந்திகளாகவே முடியுமா? அல்லது, சிஎஸ்கே நிர்வாகம் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமா? சஞ்சு சாம்சன் மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவாரா? இல்லை, ஜடேஜா சிஎஸ்கே-வின் நிரந்தர அடையாளமாகத் தொடர்வாரா? இன்னும் சில நாட்களில் விடை தெரிந்துவிடும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News