Monday, January 26, 2026

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-

மற்ற கட்சிகளெல்லாம் ஆண்டுக்கு ஒரு மாநாடு நடத்துகிறார்கள். ஆனால் மாதத்திற்கு ஒரு மாநாடு நடத்தும் கட்சி தி.மு.க. தான். எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க.வை தொட்டு கூட பார்க்க முடியாது. மகளிர் முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டு தி.மு.க. ஆட்சி.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மணிப்பூரில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அங்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.

குஜராத்தில் 2002-ம் ஆம் ஆண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பமே கொலை செய்யப்பட்டது. அந்த கொடூரமான வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பா.ஜ.க. அரசு.

இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்வது தமிழ்நாட்டில்தான். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நடக்கும் மாநிலங்கள் உத்தர பிரதேசம், மராட்டிய மாநிலம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம். இந்த 4 மாநிலங்களையும் ஆட்சி செய்து கொண்டிருப்பது பா.ஜ.க.தான்.

தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் என்று பாசிஸ்டுகள் கனவு காண்கிறார்கள். பழைய அடிமைகள் மட்டுமின்றி, புதிய அடிமைகளையும் அழைத்து வருகிறார்கள். எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க.வையும், தமிழ்நாட்டையும் அவர்களால் தொட்டு கூட பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related News

Latest News