Thursday, October 9, 2025

கால்பந்து வரலாற்றில் ‘ஒரே ஆள்’! சாதனை படைத்த CR7!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இப்போது சரித்திரத்தில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையைச் செய்துள்ளார். ஆம், உலகின் முதல் ‘பில்லியனர்’ கால்பந்து வீரர் என்ற இமாலய மைல்கல்லை எட்டியுள்ளார்!

களத்தில் எப்போதுமே மெஸ்ஸியுடன் கடும் போட்டி இருந்தாலும், சொத்து மதிப்பில் இப்போது ரொனால்டோ பல மடங்கு முன்னிலை பெற்றுவிட்டார். சவுதி அரேபியாவின் அல்-நாசர் (Al-Nassr) கிளப்புடன் அவர் போட்ட புதிய ஒப்பந்தம்தான், அவரை இந்த உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ரொனால்டோவின் மொத்த நிகர மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்!

இந்த மலைக்க வைக்கும் சொத்து எப்படி வந்தது? அவர் அல்-நாசர் கிளப்பில் இருந்து மட்டும் வருடத்திற்கு வரியில்லாமல் சுமார் 200 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெறுகிறார். ஐரோப்பாவில் விளையாடிய போது அவர் சம்பாதித்தது 550 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். இது சம்பளம் மட்டும்தான். பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலமாக வரும் வருமானம் தனி! நைக் (Nike) நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலமாக மட்டுமே வருடத்திற்கு 18 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.

கடந்த ஜூன் மாதம், அல்-நாசர் கிளப்புடன் அவர் போட்ட புதிய ஒப்பந்தத்தின் மதிப்பு 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம்! மேலும் அந்த கிளப்பின் 15% பங்குகளும் அவருக்குச் சொந்தம். இன்ஸ்டாகிராமில் 660 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகள் என, 40 வயதாகும் ரொனால்டோ, கால்பந்தில் இருந்து ஓய்வே பெற்றாலும் கூட, உலகின் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரராகவே தொடர்வார் என்பதில் சந்தேகமில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News