ஜெயலலிதா நினைவு நாள் இன்றா? நாளையா?

254
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதி இறந்துவிட்டதாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்க, நினைவுநாளை இன்று அனுசரிப்பதா அல்லது முன்னதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்  படி நாளை அனுசரிப்பதா என அஇஅதிமுக தொண்டர்களே குழம்பி போயுள்ளனர்.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்கு பிறகு டிசம்பர் 5ஆம்  தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்து விட்டதாக அப்போலோ மருத்துவ நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் விலக ஓபிஎஸ் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அப்போதைய முதல்வர் ஈபிஎஸ் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார்.

இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 5ஆம் தேதி 11.30 மணி அளவில் ஜெயலலிதா இறந்து விட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி 3.30மணியில் இருந்து 3.50மணிக்குள் ஜெயலலிதா இறந்துவிட்டதாக எக்கோ நிபுணர் நளினி மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் சாட்சியம் அளித்திருப்பதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் போன்ற அஇஅதிமுகவின் முக்கிய பிரபலங்கள் நாளை திட்டமிட்டபடி நினைவுநாளை அனுசரிக்க உள்ள நிலையில், அதிமுக முன்னாள் பிரமுகர் கேசி பழனிசாமி ‘ஆறாத ரணமாம் அம்மாவின் மரணம்’ என ட்விட்டரில் பதிவிட்டு இன்றைக்கு தான் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு நாள் என கருத்து தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்து, ஈபிஎஸ் அமைத்த ஆணையத்தின் அறிக்கை மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.