மரணத்தில் முடியும் முதல் காட்சி கொண்டாட்டங்கள்! தீர்வு சாத்தியமா?

254
Advertisement

அரசியல், ஆன்மீகம், சினிமா போன்ற துறைகளில் முன்னோடியாக செயல்பட்டு, சிறந்து விளங்குபவர்களை விட, அவர்களை பின்பற்றுகிறவர்களுக்கு தான் அதன் மீதான போதை அதிகமாக இருக்கும் என்பதை உறுதி செய்வது போல பல சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் நடித்துள்ள ‘வாரிசு’ ‘துணிவு’ படங்கள் வெளியாகி திரையரங்குகளில் housefull காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டிய புதுப்படங்கள் பீதியை கிளப்பி வருகின்றன.

காரணம், பட ரிலீஸை அடுத்து அரங்கேறும் ரசிகர் மோதல்களும், தியேட்டர் அசம்பாவிதங்களும், ஒரு படி மேலே போய் எதிர்பாராமல் நிகழும் திடீர் மரணங்களும் தான். பட ரிலீஸ் முதல் நாளிலேயே விஜய் bannerஐ அஜித் ரசிகர்கள் கிழிக்க, பதிலுக்கு விஜய் ரசிகர்கள் அஜித் bannerஐ கிழிக்க, சென்னை ரோகினி திரையரங்கில் நடந்த மோதல் முற்றி பரபரப்பான கட்டத்தை அடைந்தது.

இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இது போதாதென, முதல் காட்சி கொண்டாட்டத்திற்காக container லாரி மீது ஏறி ஆடிய அஜித் ரசிகர் பரத் குமார், கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் காயப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரத் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்த செய்தி மாநிலம் முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இளம் தலைமுறையினர் சினிமா நட்சத்திரங்களின் மீது வைக்கும் அளவுக்கதிகமான மோகம் அவர்களின் உயிரையே பறித்து விடுகிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் மோதல்களை பற்றி பேசிய நடிகர் விஜய், நீங்கள் யாருக்காக சண்டை போடுகிறீர்களோ அவர்களுக்கே உங்களை பிடிக்காமல் போய்விடும் என கூறியிருந்தார். விஜயும் அஜித்தும் நட்புறவுடன் இருந்து வரும் நிலையில் ரசிகர்களிடையே காணப்படும் மோதல் போக்கு வருத்தம் அளிப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள், நேர்மறையான அணுகுமுறையை கடைபிடிப்பதே தீர்வுக்கான தொடக்கமாக இருக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர்.