நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி வரும் நிலையில் தற்போது தண்ணீருடன் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தண்ணீர் மாநாடு – 2025 ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி! பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி! நீரின்றி அமையாது உலகு! நினைவில் நிறுத்திப் பழகு! என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடக்கவிருக்கிறது.
தண்ணீரின் தேவை என்ன? இன்றைக்கு தண்ணீர் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது? ஒரு மிக உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகின்ற, இலாபம் குவிக்கின்ற ஒரு சந்தை பண்டமாக மாற்றி இருப்பது எவ்வளவு பெரிய பேராபத்தான போக்கு என்பதையெல்லாம் எடுத்து விளக்குகிற மிக மிக அவசியமான ஒரு மாநாடு இந்த தண்ணீர் மாநாடு – 2025.
நாள்: 15-11-2025 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு
இடம்: வீரப்பெரும்பாட்டன் கரிகால் பெருவளத்தான் திடல் பூதலூர் திருவையாறு தஞ்சை மாவட்டம்
என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்! தண்ணீர் மாநாடு சிறக்க வேண்டும்!
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
