செங்கல்பட்டு அருகே முறையாக பிரசவம் பார்க்காததால், பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக கூறி, அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் – சுஜாதா தம்பதிக்கு 8 வயதில் பெண் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் கருவுற்ற சுஜாதா, பிரசவத்திற்காக சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது இரவில் மருத்துவர் இல்லை எனவும், அதனால் செவிலியர்கள் இருவர் மற்றும் மருத்துவ பணியாளர் ஆகியோர் சேர்ந்து சுஜாதாவிற்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது சுஜாதாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் இருக்கும் குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை அகற்றினால் தான் சுஜாதாவை காப்பாற்ற முடியும் என கூறி உள்ளனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. இதை அடுத்து, சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி சுஜாதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.