தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மரியாதையற்ற வகையிலும் பேசியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஆத்தூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த அனிதா ராதாகிருஷ்ணன், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக விமர்சித்ததாகவும், அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய உரையின் எழுத்துப்பூர்வ நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிபதி, முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான அவர் முதலமைச்சருக்கு உரிய மரியாதை வழங்க வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்டினார். இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க முடியாது என்று கூறி, அனிதா ராதாகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
