Monday, December 22, 2025

“தவெக மீது வன்மம் கொண்ட முதல்வர்” விஜய் தாக்கு !!

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் பழையபடி கட்சி பணிகளை வேகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தவெக பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது.

தவெக தலைவர் விஜய், கரூர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை விளாசினார். தவெக மீது வன்மம் கொண்டு முதல்வர் சட்டப்பேரவையில் பேசியதாகவும், தவெகவுக்கு எதிராக முதல்வர் அவதூறு பரப்பியதாகவும் குற்றம்சாட்டினார். குடும்ப உறவுகளை இழந்ததால் வலியுடனும், வேதனையுடனும் இருந்ததால் இவ்வளவு நாள் அமைதி காத்ததாகவும் என்று தெரிவித்தார்.

மேலும்,கரூர் விவகாரத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதத்தை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியதாகவும், அவசரம் அவசரமாக ஒரு நபர் விசாரணை அமைத்தது ஏன்? அந்த ஆணையத்தை அவமதிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? என திமுக அரசை பார்த்து உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தது என்று விஜய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், ”நான் மீண்டும் சொல்கிறேன் வரும் தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி. இந்த போட்டி இன்னும் ஸ்ட்ராங் ஆக இருக்கும்” என்று கூறினார். விஜய் சொன்னதை கேட்டதும் கூட்டத்தில் இருந்த தவெக நிர்வாகிகள் கரகோசங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். இருப்பினும் தவெக தலைவர் விஜய்யின் பேச்சு அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே அதிருப்‍தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், கரூர் விவகாரத்தில் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் விஜய்க்கு எதிராக நிற்க, அதிமுகவும், பாஜகவும் ஆதரவாக நின்றன. இந்த விவகாரத்தில் விஜய் பக்கம் நின்று திமுக அரசை வெளுத்தெடுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதனால் தவெக தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பேசத் தொடங்க, EPS-ம் இதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தார்.

ஆனால் தற்போது இன்று தவெக பொதுக்குழுவில் ‘முதல்வர் வேட்பாளர் விஜய் தான்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் விஜய் தனது பேச்சின் மூலம் அதிமுகவும், பாஜகவும் போட்டு வைத்தக் கணக்கை தவுடுபொடியாக மாறியது.

Related News

Latest News