சென்னை மக்களே! இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் இயக்கத்தில் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (புறநகர் நடைமேடைகள்) கையாளப்படும் புறநகர் ரயில்கள் 2026 இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 5 நள்ளிரவு 23:59 மணி வரை (45 நாட்களுக்கு) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.

சென்னை கடற்கரை தாம்பரம்/செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/அரக்கோணம் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை, அனைத்து மின்சார (EMU) ரயில்களும் சென்னை எழும்பூரில் 6-வது நடைமேடையான விரைவுப் பாதையில் இயக்கப்படும்.

அரக்கோணம்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/தாம்பரம் சென்னை கடற்கரை மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரயில்களும் இதே காலகட்டத்தில் சென்னை எழும்பூரில் 5-வது நடைமேடையான விரைவுப் பாதை இயக்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் (2026 பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை), சென்னை கடற்கரை – தாம்பரம் / செங்கல்பட்டு/ காஞ்சிபுரம்/ அரக்கோணம் மார்க்கத்தில் தற்போதுள்ள மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த தற்காலிக நேர அட்டவணை இணைப்பு A-வில் (Annexure – A) கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News