சென்னை முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் மூலம் 20-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனியார் பைக் டாக்ஸிகளை இயக்கி வருகின்றனர். சென்னையில் மட்டும் 4500 பெண்கள் பைக் டாக்ஸிகளை ஓட்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பைக் டாக்சிகளுக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பைக் டாக்சி அசோசியன் சார்பில் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் “எங்களை அச்சுறுத்தும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்கள் பைக் டாக்ஸி ஓட்டுநர்களை தாக்குகின்றனர். பெண் பைக் டாக்ஸி ஓட்டுநர்களை அச்சுறுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.