தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து அதனுடன் தொடர்புடைய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் உள்ள மொத்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 கணக்கீட்டுப் படிவங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்பட்டன. அவற்றில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு நடவடிக்கையின் போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவில் உள்ள வாக்காளர்கள் ஆகியோரின் விவரங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன. அதன் அடிப்படையில் நீட்டிக்கப்பட்ட காலத்தில் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 97 லட்சம் முதல் 1 கோடி வரையிலான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த திருத்தங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வெள்ளிக்கிழமை அதாவது இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் வெளியிடுகிறார். இந்த வரைவு பட்டியலை, தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், மாநகராட்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரகங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.
மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம். சரியான முகவரியில் வசிப்பவர்களைத் தவிர, உயிரிழந்தோர், முகவரி மாற்றியோர், இரட்டைப் பதிவாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும்.
அந்த நீக்கத்திற்கான காரணங்களும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும். இருப்பினும், நீக்கப்பட்ட காரணங்கள் தவறானவை என யாருக்காவது ஆட்சேபனை இருந்தால், ஜனவரி 18-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.
மேலும், இடம் மாறியவர்கள் படிவம் 8-ஐ, புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர விரும்புவோர் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
