திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பெருமாள் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாய கூலித்தொழிலாளியான மூர்த்தி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பெருமாள் புதூர் கிராமத்தில் இளைஞர்கள் மது போதையில் அடிக்கடி தகராறு ஈடுபட்டதால் மூர்த்தி தனது வீட்டின் முன்பு சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார்.
இந்த நிலையில் பெருமாள் புதூரில் கஞ்சா வியாபாரம் செய்யும் நிர்மல் குமார் என்பவருக்கு மூர்த்தி வீட்டின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவால் இடையூறு ஏற்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவை அகற்றக்கோரி போதை ஆசாமிகள் மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர்.
நேற்று இரவு கஞ்சா வியாபாரி நிர்மல் மூர்த்தி வீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா பொருத்திய இடத்தில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தீ வைத்துள்ளார். தீ பற்றி எரிவதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
இதையடுத்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து தப்பி ஓடிய நிர்மலை தேடி வருகின்றனர். சிசிடிவி கேமராவை அகற்றக்கோரி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.