தமிழ்நாட்டில் 2 கோடியே 27 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இதில் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், மத்திய – மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் ஆகியோர் தவிர்த்து, ஏனைய அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கப்படும்.
அதன்படி பார்த்தால் தற்போது 1 கோடியே 10 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். 2025ம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்கப்படவில்லை. இதனால் 2026ம் ஆண்டு ரொக்க பணம் அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிலவியது. இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 23ம் தேதி தலைமை செயலகத்தில், பொங்கல் தொகுப்புடன் எவ்வளவு ரொக்க பணம் வழங்கலாம்? என்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும். ஆனால் ரொக்க பணம் எவ்வளவு அளிக்கப்படலாம்? என்பது குறித்து, உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
என்றாலும் ரூபாய் 3000 தொடங்கி 5000 வரையில் ரொக்க பணம், வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு பரிசாக வெளியிடுவார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, முந்திரி – திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன், ரூபாய் 2500 ரொக்க பணமாக வழங்கியது.
எனவே அதை முறியடிக்கும் வகையில், இந்தமுறை நிச்சயம் 3000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. சட்டசபை தேர்தல் நெருங்குவதும் இதற்கு முக்கிய காரணமாகும். பொங்கல் தொகுப்பு குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியானவுடன் ஜனவரி முதல் வாரத்தில் வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, 2வது வாரத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும்.
