சிறு குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்கு தாய்மார்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.இதற்கு ஒரு தீர்வாக உணவையே கலைவடிவத்தில் படைத்து அனைவரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘புட் ஆர்டிஸ்ட்’ லாலே மோமேடி.
அவரது 2 வயது குழந்தை சாப்பிட அடம் பிடித்ததால் ஒருநாள் அவர் யோசனையில் விழைந்ததுதான் ‘கார்ட்டூன் சமையல்’. குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் உருவத்தில் உணவு பதார்த்தங்கள் தயார் செய்து அவருடைய மகனுக்கு அளித்தார்.
முதன் முதலில், ஒரு கேக்கை ஐந்தாறு ஆரஞ்சுச் சுளைகள், வெட்டிய தர்பூசணித் துண்டுகள், பிளாக் பெர்ரி மற்றும் சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து, சிங்கம் உருவத்தில் கொடுத்திருக்கிறார். அதன் தோற்றத்தினால் ஈர்க்கப்பட்ட அவருடைய மகன், அனைத்தையும் சாப்பிட்டான். காய்கறிகளைக் கண்டால் காத தூரம் போகும் குழந்தைகளுக்கு லாலேவின் பார்முலாவைப் பயன்படுத்தி உணவைக் கொடுத்தால், சமர்த்தாக சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள்.