Sunday, February 15, 2026

செங்கல்பட்டு அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு லாரி

சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விடுமுறை தினம் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒரே பாதையில் மாற்றி மாற்றி அனுப்பி வந்தனர்.

அப்போது சென்னையிலிருந்து அதிக வேகத்தில் வந்த ஒரு சொகுசு கார், முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றது. அதே நேரத்தில் திருச்சியிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த கனரக லாரி எதிரே வந்தது. மோதலை தவிர்க்க லாரி ஓட்டுநர் வாகனத்தை சாலையின் இடதுபுறமாக திருப்பிய நிலையில், எதிர்பாராத விதமாக சுமார் 20 அடி ஆழமான பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் அவருடைய உதவியாளரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News