ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், கார்களுக்கான இறக்குமதி வரியை 110 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தத்தின் படி, சுமார் ரூ. 16.3 லட்சத்திற்கும் அதிக விலையுள்ள இறக்குமதி கார்களுக்கு உடனடியாக வரிக் குறைப்பு அமல்படுத்தப்படும். பின்னர், காலக்கட்டங்களின் அடிப்படையில் இந்த வரி மேலும் குறைக்கப்பட்டு, இறுதியில் 10 சதவீதம் வரை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த உலகளாவிய அச்சங்கள் நிலவி வரும் சூழலில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வாகன சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மேலும் திறக்கும் முக்கிய முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
இந்த வரி குறைப்பால் வோக்ஸ்வாகன், மெர்சிடீஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன் அடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
