‘நானும் அப்ளை பண்ணலாமா?’ BCCI போஸ்ட்டில் ‘ஜடேஜா’ போட்ட அதிரடி ட்வீட்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு நக்கலான கருத்து இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

பிசிசிஐ-யின் தேர்வுக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் அகர்கர் நேற்று திடீரென விலகிய நிலையில், காலியாக உள்ள அந்த இடத்திற்குப் புதிய விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றது.

இதற்குப் பதிலளித்த ஜடேஜா, “விண்ணப்பிப்பதற்கான நடைமுறை என்ன?” (What’s the procedure?) என்று பிசிசிஐ-யின் போஸ்ட்டிலேயே கேள்வி எழுப்பியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜடேஜாவின் இந்த நக்கல், அவருக்கும் முன்னாள் தேர்வாளர் அஜித் அகர்கருக்கும் இடையே ஏதேனும் மோதல் இருந்ததா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.

உண்மையில், அஜித் அகர்கர் தேர்வுக் குழுத் தலைவராக இருந்தபோது, இந்திய டி20 அணியில் மூத்த வீரர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அகர்கரின் இந்த ‘யங் இந்தியா’ திட்டத்தால் சீனியர் வீரர்களுக்குச் சில காலம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இருப்பினும், 2024 டி20 உலகக் கோப்பையின் போது ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டனர்.

உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு மூவருமே ஓய்வை அறிவித்தாலும், அதற்கு முன்னதாக அகர்கரின் திட்டத்திற்கும் சீனியர் வீரர்களுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவியதாகக் கூறப்படுகிறது.

இப்போது அகர்கர் வெளியேறிய அடுத்த நிமிடமே ஜடேஜா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருப்பது, அந்தப் பகையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக ஜடேஜாவுக்கும் தேர்வுக் குழுவுக்கும் இடையிலான உறவு அவ்வளவு சுமூகமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, 2024 இலங்கைத் தொடர் மற்றும் 2025 ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்களில் ஜடேஜா சேர்க்கப்படவில்லை.

ஜடேஜா இன்னும் அணியின் முக்கியமான அங்கமாக இருக்கிறார் என்று அகர்கர் மேடைகளில் சொன்னாலும், களத்தில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இது குறித்து ஜடேஜா முன்பு பேசுகையில், “தேர்வு செய்வது என் கையில் இல்லை, அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதற்கு அவர்களிடம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் நான் விளையாடத் தயாராகவே இருக்கிறேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

வழக்கமாகச் சமூக வலைதளங்களில் அவ்வளவு ஆக்டிவாக இருக்காத ஜடேஜா, நீண்ட இடைவெளி கழித்து இப்போது பிசிசிஐ போஸ்ட்டில் கமெண்ட் செய்திருப்பது பல உள்நோக்கங்களைக் கொண்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

ஜடேஜாவின் இந்தச் செயல் ஒரு நகைச்சுவையாகத் தெரிந்தாலும், அதன் பின்னால் தேர்வாளர்கள் மீதான ஒரு மறைமுகத் தாக்குதல் இருப்பதாகவே கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

தற்போது ஓய்வில் இருக்கும் ஜடேஜா, விரைவில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து தொடரில் மீண்டும் இந்திய அணியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ, ஜடேஜாவின் இந்த ஒற்றை வரி கேள்வி, இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவில் நிலவும் குளறுபடிகளை மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாக்கியுள்ளது.

Related News

Latest News