விஜய்யின் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கு தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் தொடர்ந்து அழைப்பு வராததை குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் தனி கடிதம் எழுதி நடிகரும் கட்சித் தலைவருமான விஜய் கவலை தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில், ‘தேர்தல் ஆணையம் நடத்தும் பல்வேறு ஆலோசனை, ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்குத் தவெக இன்னும் அழைக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிட தயாராக இருக்கும் நிலைமையில், எங்கள் கட்சி ஜனநாயகத்தைக் காக்கும் நோக்கில் உறுதியாக செயல்பட்டு வருகிறது. அனைத்து குடிமக்களின் கருத்தும் கேட்கப்படும் சூழலை உருவாக்குவது எங்கள் கட்சியின் அடிப்படை நோக்கம்,’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய தேர்தல் அமைப்பில் தேர்தல் ஆணையம் முக்கியத் தீர்மான அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதால், பதிவு பெற்ற அரசியல் கட்சியான தவெக-வையும் இந்த கூட்டங்களில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சமத்துவம், அரசியல் சமநிலை, வெளிப்படுத்தல் போன்ற அடிப்படை ஜனநாயக மதிப்புகள் பாதிக்கப்படும் வகையில் இந்த புறக்கணிப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தேர்தல் செயல்முறைகள் முழுமையாக வெளிப்படையாகவும், அனைவருக்கும் சமவாய்ப்பாகவும் இருக்க வேண்டுமெனில், அடுத்தடுத்த அனைத்து ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு அமர்வுகளிலும் தவெக-வுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையத்திற்கும் முதன்மை தேர்தல் அதிகாரிக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறப்பு தேர்தல் சீர்திருத்தம் அதாவது SIR தொடர்பான கூட்டங்களிலும் தொடர்ந்து தவெக புறக்கணிக்கப்படுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து, இதில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
