குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 9ம் தேதி குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது.
பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
மொத்தம் 770 வாக்குகள் பதிவானது.தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார்.
இதன் மூலம் 152 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றிபெற்றார். இந்நிலையில் இன்று சி.பி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.