Sunday, December 7, 2025

அமெரிக்க டாலருக்கு bye bye., இனி தங்கம் தான் ஒரே வழி!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் படிக்கப்பட்ட, ‘ரிச் டாட், புவர் டாட்’ என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கியோசாகி, இப்போது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். “அமெரிக்க டாலரின் ஆட்டம் முடியப்போகிறது. இனிமேல் தங்கம் மற்றும் வெள்ளிதான் உங்களைக் காப்பாற்றும் ஒரே வழி,” என்று அவர் கூறியிருப்பது, உலகப் பொருளாதார அரங்கில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்த இந்த நேரத்தில், கியோசாகி சொல்லியிருக்கும் இந்த விஷயம், இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளைக் கொண்ட ‘பிரிக்ஸ்’ அமைப்பு, தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ‘யூனிட்’ என்ற ஒரு புது நாணயத்தை அறிவிக்கப் போவதாகவும், இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து, வரலாறு காணாத பணவீக்கம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்க டாலருக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது. தயாராக இருங்கள், விழித்திருங்கள். இந்த நேரத்தில், அமெரிக்க டாலரை சேமிப்பவர்கள்தான் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திப்பார்கள். உங்கள் கையில் இருக்கும் டாலர், உங்களை அழித்துவிடும். என்னைக் கேட்டால், தங்கம், வெள்ளி, பிட்காயின், மற்றும் ஈதர் ஆகியவற்றை வாங்கி வையுங்கள்,” என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

ஆனால், இந்த ‘பிரிக்ஸ்’ நாணயக் கதை உண்மையா? பிரிக்ஸ் நாடுகள் அதிகாரப்பூர்வமாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், அமெரிக்க டாலரை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்று, பல ஆண்டுகளாகவே இந்த நாடுகள் பேசி வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மாநாட்டில், புதின் ஒரு மாதிரி ‘பிரிக்ஸ்’ நாணயத்தைக் கையில் வைத்திருந்தது, இந்த விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

தற்போதைக்கு, உலக வர்த்தகம் முழுவதும் அமெரிக்க டாலரை நம்பித்தான் இயங்குகிறது. ஆனால், கியோசாகி போன்ற பொருளாதார நிபுணர்களின் இந்தத் தொடர் எச்சரிக்கைகள், “ஒருவேளை அப்படி நடந்தால் என்ன செய்வது?” என்ற ஒரு பெரிய கேள்வியை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. ஆக, உலகப் பொருளாதாரம் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News