அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்த புத்தாண்டில், நாடு முழுவதும் “வைபை அழைப்பு” எனப்படும் “வாய்ஸ் ஓவர் வைபை” சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மற்றும் மேம்பட்ட சேவை, தற்போது இந்தியாவின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.
இந்த சேவையின் மூலம், வைபை நெட்வொர்க்கை பயன்படுத்தி குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் முடியும். மொபைல் சிக்னல் பலவீனமாக இருக்கும் வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற இடங்களிலும் தெளிவான மற்றும் நம்பகமான தொடர்பை இந்த சேவை வழங்குகிறது. சவாலான சூழல்களிலும் தடையில்லா, உயர்தர இணைப்பை இது உறுதி செய்கிறது.
இந்த வைபை அழைப்பு சேவைக்காக வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதையும் செலுத்த தேவையில்லை. இதைப் பயன்படுத்த, தங்களுடைய செல்போனில் உள்ள ‘செட்டிங்ஸ்’ பகுதியில் “வைபை காலிங்” என்ற விருப்பத்தை இயக்கினால் போதும்.
மேலும் விவரங்களுக்கு, வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம் அல்லது 1800 1503 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
