நெல்லை மாவட்டம், தேவர்குளம் அருகேயுள்ள தச்சிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். இவருக்கு ராதிகா (வயது 28) என்ற மகளும், கண்ணன் (வயது 25) என்ற மகனும் உள்ளனர். ராதிகாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கண்ணன் கூலி வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ராதிகா அதே பகுதியைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமான ஒரு நபருடன் நெருங்கிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தம்பி கண்ணனுக்குத் தெரியவரவே, அவர் தனது அக்காவைக் கடுமையாக எச்சரித்துள்ளார். “திருமணமான நபருடன் பழக்கம் வைப்பது குடும்பத்திற்கு அவப்பெயரைத் தரும், எனவே அந்தப் பழக்கத்தைக் கைவிடு” என்று கண்ணன் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் அக்கா – தம்பி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று மாலையில் வீட்டில் ராதிகாவும், கண்ணனும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கண்ணன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, தனது அக்கா என்றும் பாராமல் ராதிகாவைச் சரமாரியாக வெட்டினார்.
ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ராதிகாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேவர்குளம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராதிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற தம்பி கண்ணனை அதிரடியாகக் கைது செய்தனர்.
தனது அக்காவையே தம்பி வெட்டிக்கொலை செய்த இச்சம்பவம் தேவர்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
