கேரளா மாநிலம் ஆலப்புழா, தும்போலியை பூர்வீகமாகக் கொண்ட ஷரோன் (32). இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான அவனி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
இந்நிலையில், திருமண நாள் அன்று அதிகாலை மணப்பெண் அவனி தனது தந்தையுடன் அலங்காரம் செய்வதற்காக அழகு நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் மணப்பெண்ணின் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து மணமகன் ஷாரோன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவனிக்கு ஷாரோன் தாலி கட்டி மணம் முடித்தார்.
இதைத் தொடர்ந்து அவனிக்கு அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளனர். இவர்களின் திருமணம் தொடர்பான செய்தி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
