கோடீஸ்வரர் ஆக இருப்பதில் சலிப்பு ஏற்பட்ட ஓர் இளைஞர் மாதச்சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது குழந்தைகளுக்கான பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கினார் ஜான் கார்டர். அதன்மூலம் நன்றாகசம்பாதித்தார். அப்போது குழந்தைகளுக்கான பொருட்களை டிரக்கில் ஏற்றிக்கொண்டு தனது தாயை சந்திக்கச் சென்றுள்ளார்.
அதைக்கண்டு அவரது தாய் பயந்துவிட்டார். தனது மகன் போதைப்பொருள் கொண்டுவருகிறானோ என்று சோகத்தில் ஆழ்ந்துவிட்டார்.
அந்த சமயத்தில் ஜான் கார்டரைப் பற்றி ஃபார்ச்சூன் இதழின் அட்டைப்படத்தில் படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது. அதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஜான் கார்டரின் அம்மா.
அதன்பிறகு, ஆன்லைன் வர்த்தகத்தைத் தொடர விரும்பாத ஜான் சில ஆயிரம் டாலருக்கு அந்த ஆன்லைன் வர்த்தக வலைத்தளத்தை விற்றுவிட்டார்.
கல்லூரிக் காலத்துக்குப் பிறகு, கடன் தேடும் வலைத்தளம் ஒன்றைத் தொடங்கி 2006 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர் சம்பாதித்தார். 27 வயதில் அது அவருக்குப் பெரிய தொகையாகத் தெரிந்ததால் அதனை விற்று கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.
உடனே, தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு இந்தோனேஷியாவில் விருந்தளிக்க விரும்பினார். ஆனால், நண்பர்கள் அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்ததால் யாரும் வரவில்லை.
இதனால், ஜான் கார்டருக்கு வருத்தமாகிவிட்டது. மூன்று வாரம்வரை பொறுத்துப் பார்த்தார். அவரது மனம் பிசினஸில் செல்லவில்லை. அதனால் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்.
சும்மா இருந்தால்தால்தான் கஷ்டம் என்றில்லை, கோடீஸ்வரராக இருப்பதிலும் கஷ்டந்தான் போலும்.