இருக்கும் களநிலவரத்தை பார்த்தால் எந்த நொடி வேண்டுமானாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டுவிடும் என்ற யுத்த வாசம் திரும்பும் திசையெல்லாம் வீசவே செய்கிறது.
இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா அதிகாரிகள் ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றனர். இது ஓமனில் நடைபெற உள்ள நிலையில் ‘சனிக்கிழமை நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஈரானுக்கு அந்த நாள் மிகவும் மோசமானதாக அமையும்’ என்று டொனால்ட் டிரம்ப் அனல் பறக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே ஏற்கனவே இருந்த பதற்றம் அடுத்த படிக்கு சென்றுள்ளது.
இதற்கிடையே பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்கா அனுப்பிய கடிதத்தை ஈரான் ஏற்கவில்லை. அது மட்டுமல்லாமல் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்போவது இல்லை என்று அறிவித்தது எறியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றிய கதையாகவே இருக்கிறது.
இந்நிலையில் டிரம்பிடம் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்துமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப் “ஈரானிடம் தற்போது அணுஆயுதம் இல்லை. ஈரானிடம் நேரடியாக அமெரிக்கா பேச உள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் ஈரானுக்கு அந்த நாள் மிகவும் மோசமான தினமாக மாறிவிடும். ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முடியுமா? ஒன்றாக அனைவரும் வாழ முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியிருப்பதால் சனிக்கிழமை நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அன்றைய தினமே டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது வெடிகுண்டுகளை வீச போகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் கூறியிருப்பதன் பொருள் அமெரிக்கா ஈரான் மீது வெடிகுண்டுகளை வீசக்கூடும் என்பதோடு ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா தாக்கலாம் என்பதே என்று கூறப்படுகிறது.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கலாம். என்ன இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளதால் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் அந்த பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவை பொறுத்து தான் அமையும் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.