பெரும்பான்மையான மக்கள் சமூக வலைதளங்களின் ஆதிக்கப்பிடியில் அகப்பட்டுக்கொண்ட இந்த காலக்கட்டத்தில் டிசைன் டிசைனாக உண்மையும் பொய்யும் என பரபரப்பாக பரப்பப்படும் பல தகவல்கள் “ஒரு வேளை இருக்குமோ?” என பலரையும் சந்தேக சுழலில் சிக்கவைத்துவிடுகின்றன. அந்த வகையில் தற்போது சமூகவலைதளங்களில் உலா வரும் ஒரு தகவல் உண்மையா பொய்யா என்ற பேசுபொருளாக மாறியுள்ளது. அது என்னவென்றால் காசோலைகளில் கருப்பு மையால் எழுதுவதை தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தான்.
இந்த தகவல் இணையவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பதோடு பலர் அத்தகைய நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள காரணத்தைக் அலசி ஆராயக் கூட ஆரம்பித்துவிட்டனர். இருப்பினும், இந்த தகவல் முற்றிலும் தவறானது.
ரிசர்வ் வங்கியின் காசோலை துண்டிப்பு முறை அதாவது Cheque Truncation System-ன் படி, வாடிக்கையாளர்கள் காசோலைகளை எழுதும் போது நிரந்தர மையில் தெளிவாக எழுதுவதை பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், காசோலைகளுக்கு குறிப்பிட்ட மை வண்ணங்களை கட்டாயமாக்கும் அல்லது தடைசெய்யும் எந்த விதிகளையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.
பணம் பெறுபவரின் பெயர் அல்லது தொகை போன்ற முக்கியமான காசோலை விவரங்களில் எந்த மாற்றங்களும் திருத்தங்களும் செய்ய முடியாது என்றும் ரிசர்வ் வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், ஒரு புதிய காசோலை வழங்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை மோசடியைத் தடுப்பதையும் காசோலை பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.