என்.டி.டி.வி செய்தி சேனல் சார்பில் வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் திராவிட சித்தாந்தத்தின் எதிர்காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, ‘தமிழ்நாடு உச்சி மாநாடு’ இன்று சென்னை, கிண்டி சோழா ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நெறியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கேள்வி : வரும் சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்யும் தேர்தலா இல்லை, திமுக ஆட்சியை வெளியேற்ற நடக்கும் தேர்தலா?
இபிஎஸ் : வாரிசு அரசியல், குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல் இது. மீண்டும் எம்ஜிஆர், அம்மா அவர்களின் ஆட்சி அமைப்போம் அதுதான் எங்கள் நோக்கம். ஏற்கனவே மாண்புமிகு உள்துறை அமைச்சர் கூட்டணிக்குத் தலைமை அதிமுக. என்று அறிவித்திருக்கிறார். அதிமுக தான் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று அறிவித்துவிட்டனர். எங்கள் கட்சி 51 ஆண்டுகால பொன்விழா கண்ட கட்சி. 31 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கட்சி, 2 கோடி தொண்டர்கள் நிறைந்தது. தமிழகம் முதன்மை மாநிலம் என்ற அந்தஸ்தை அதிமுக ஆட்சியில் எட்டிப்பிடித்திருக்கிறது.
கேள்வி : அதிமுக இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது…?
இபிஎஸ் : நாங்கள் ஏற்கனவே தயாராகிவிட்டோம். 185 தொகுதிகளில் பயணம் முடித்துவிட்டுத் தான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே மகக்ளிடம் செல்வாக்கு இருக்கிறது. கண்டிப்பாக 210 இடங்களில் வென்று ஆட்சி அமைப்போம்.
கேள்வி : இன்று காலை முதல்வர் இது திமுக கூட்டணிக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கும் நடக்கும் போர். அதிமுகவை பாஜகவின் பி டீம் என்கிறாரே?
இபிஎஸ் : திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது, அப்படியென்றால் காங்கிரஸுக்கு திமுக பி டீமா? அதிமுக பொறுத்தவரை மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது, எஙளை எதிர்க்கத் துணிவு, திராணி இல்லாத காரணத்தால் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார். இப்போது நடக்கும் தேர்தல் மாநிலத்துக்கான தேர்தல், தேஜ கூட்டணி தேசியளவில் உள்ளது. எங்கள் கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை. அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.
கேள்வி : ஊழல் ஆட்சி என்று அதிமுகவை முதல்வர் குறிப்பிட்டார், பாஜக அதிமுகவின் ஊழலை புரிந்துகொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டாரே?
இபிஎஸ் : இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே மாநில ஆட்சி திமுக அரசு. ஏற்கனவே கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரிசி பேரம், பூச்சி மருந்து ஊழல் என பல ஊழல்கள் இருந்தன. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக தான். ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்கு அருகதை இல்லை. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பேசினார். அவரை திமுகவில் இணைத்து அமைச்சர் பதவி கொடுத்தவர் தான் ஸ்டாலின்.
கேள்வி : ஊழல் ஒரு தேர்தல் பிரச்னையா? நாங்கள்தான் திராவிட இயக்கத்துக்கும் தமிழுக்கும் பாதுகாவலர் என்று திமுக சொல்கிறதே?
இபிஎஸ் : உண்மையிலேயே தமிழைப் பாதுகாப்பது அதிமுக தான். எம்ஜிஆர் இருக்கும்போது மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். அம்மா இருக்கும்போது தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். தமிழை வளர்த்தது அதிமுக தான். ஊழல் என்பது மோசமான மக்கள் பார்க்கின்ற இஷ்யூ. எப்படி ஒரு அரசாங்கத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று அம்மா நிரூபித்துக் காட்டியிருக்கிறார். நான் முதல்வராக இருந்தபோதும் நடத்திக்காட்டினேன்.
நீதிமன்றம் சென்று எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறையில் 4800 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக வழக்குத் தொடர்ந்தனர். உச்சநீதிமன்றம் சென்று தடையாணை வாங்கப்பட்டது. பிறகு உச்சநீதிமன்றம் திமுக அரசு அமைந்ததும் தடையாணையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சொன்னது. உயர்நீதிமன்றம் விசாரித்தபோது வழக்கை தாக்கல் செய்தவர்களே வழக்கைத் திரும்பப் பெறுவதாகச் சொன்னார்கள். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.
முதல்வர் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டை வைத்துப் பதிவுசெய்துவிட்டார். அதை நீக்க முடியாது. எனவே நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்று வழக்கை நடத்தி நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு உங்கள் முன் வந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.
திமுக அப்படியல்ல பல வழக்குகளில் வாய்தா வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வழக்கையெல்லாம் நடத்தினால் தீர்ப்பு எதிராக வந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். அதிமுகவைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. மக்களைத் துணிச்சலோடு சந்திப்போம் வெற்றி பெறுவோம்.
கேள்வி : பிரதமர் மோடி சமீபத்தில் வாரிசு அரசியல் குறித்து பேசினார். அதற்கு திமுக தலைவர் பாஜக எங்களுக்கு கற்றுக்கொடுக்கத் தேவையில்லை என்று சொல்லி இருக்கிறாரே? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
இபிஎஸ் : இந்தியா ஜனநாயக நாடு. அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். திமுகவைப் பொறுத்தவரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகாரத்துக்கு வரமுடியும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அனுபவிக்கிறார்கள். அதுதான் வாரிசு அரசியல். வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.
மத்தியில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பிரதமராக இருந்ததை வாரிசு அரசியல் என்று அன்றைய தினம் குறிப்பிட்டார்கள். அதுபோன்று தான் இன்றைய வாரிசு அரசியல் திமுகவில் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. குடும்பத்தில் இருப்பவர்களே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் ஊழல் நடக்காமல் இருக்குமா? ஊழல் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதுதான் இந்த தேர்தலின் நோக்கமாக இருக்கும்.
கேள்வி : மக்கள் தானே தேர்வுசெய்தார்கள்?
இபிஎஸ் : யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெல்லலாம். ஆனால் அந்த கட்சி குடும்பத்துக்குள் சிக்கியுள்ளது அதைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள். வேறு ஆட்களே இல்லையா? துரைமுருகன் அவர்கள் தமிழகத்திலேயே அதிக நாட்கள் எம்.எல்.ஏவாக இருந்தவர், அவரை ஏன் துணை முதல்வர் ஆக்கவில்லை.
நான் கிளைச் செயலாளராக இருந்து பொதுச்செயலாளர் ஆகினேன், முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்படிப்பட்ட நிலைமை திமுகவில் ஒருபோதும் வராது. ஏன் ஸ்டாலின் அவர்களே குறிப்பிடலாமே…. திமுகவில் இயக்கத்துக்குப் பாடுபட்டவர்கள் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம், முதல்வராக வரலாம் என்று ஒரு வார்த்தைச் சொல்லச் சொல்லுங்கள், பார்க்கலாம்.
கேள்வி : அதிமுக குடும்பம் பற்றிப் பேசுவோம். தினகரன் கூட்டணியில் இணைந்துவிட்டார். இதற்கு முன்பு விமர்சனம் இருந்தது. முழுமனதாக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டீர்களா அல்லது பாஜகவின் அழுத்தத்தால் கூட்டணி ஏற்பட்டதா?
இபிஎஸ் : டிடிவி.தினகரன் அதிமுகவில் இருந்தவர் முதலில் அதை புரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்குள் ஏற்பட்ட பிளவினால் தனி இயக்கம் கண்டார். தமிழகத்திலே மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் ஒத்தக் கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டு திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். அந்த எண்ணத்தில் தான் ஒன்றிணைந்து இருக்கிறோம்.
கூட்டாகத் தான் பேட்டி கொடுத்தோம். நாங்கள் அழுத்தத்திற்கெல்லாம் ஆளாகவில்லை. கூட்டணி அமைக்க முடியாது என்ற நிலையில் இருந்து இப்போது கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. அதனால் திமுகவினர் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மாண்புமிகு அம்மாவின் கனவை நனவாக்குவது தான் எங்கள் லட்சியம். இருவருடைய கருத்தும் ஒன்றாக இருந்ததால் இணைந்தோம். மேலும் சில கட்சிகள் இணையும்.
கேள்வி : பாஜக அவர்களின் கட்சியை வளர்க்க அதிமுகவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பிரதமர் மோடி குறித்து உங்கள் கருத்து என்ன?
இபிஎஸ் : அதிமுக கூட்டணி வைத்தால் இப்படிப்பட்ட விமர்சனம் தான் வரும். 1999 நாடாளுமன்றத் தேர்தல், 2001 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி வைத்திருந்தது, மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது, கொள்கை என்பது நிலையானது. அதிமுக கொள்கை நிலையானது. தேர்தல் வரும்போது ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் இருக்கிறது. அதை ஒன்றிணைத்து எதிரியை வீழ்த்துவது தான் நோக்கம்.
அந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கூட்டணியில அங்கம் வகிக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்துள்ளன, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தன. ஆகவே எந்தவொரு கட்சிக்கும் வெற்றி பெறுவதுதான் நோக்கம்.
கேள்வி : பிரதமர் மேடையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்லும்போது உங்களுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதா?
இபிஎஸ் : இல்லை. எற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். தேசிய அளவில் பாஜக தலைமை தாங்கும், மாநில அளவில் அதிமுக தலைமை தாங்கும். அமித் ஷாவும் இதைச் சொல்லிவிட்டார். வேண்டுமென்றே திட்டமிட்டு ஊடகங்கள் குழப்பத்தை ஏற்படுத்தவே இந்த கருத்தை சொல்லி வருகின்றன.
கேள்வி : தவெகவுடன் கூட்டணி வைக்க அதிமுக ஆசைபட்டதா?
இபிஎஸ் : சூழ்நிலைக்குத் தக்கவாறு தான் எந்தக் கட்சியும் முடிவெடுக்கும்.
கேள்வி : விஜய் பற்றி உங்கள் கருத்து?
இபிஎஸ் : அவர் ஒரு சிறந்த நடிகர் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
கேள்வி : அரசியலில் எப்படி விஜய் செயல்படுகிறார்?
இபிஎஸ் : இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் முழுக்க முழுக்க நம்புவது அவருடைய ரசிகர்களை, நாங்கள் முழுக்க முழுக்க நம்புவது மக்களை. நான் அரசியலுக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகிறது. 10 முறை தேர்தலை சந்தித்திருக்கிறேன், 7 சட்டமன்றத் தேர்தல், 3 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து இருக்கிறேன். கிளைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஒன்றியச் செயலாளர் மாவட்ட பொறுப்பு, அமைச்சர், முதலமைச்சர் என்று உயர்ந்து இருக்கிறேன்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பது முழுமையாகத் தெரியும். அதேபோல் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வந்த காரணத்தினாலே ஓவ்வொரு மட்டத்திலும் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும். கட்சித் தொண்டர்களை தேர்தலில் ஈடுபடச் செய்யும் அளவுக்கு அனுபவம் நிறைந்தவர்கள் எங்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள். பலரும் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள், அந்த பலம் எங்களுக்கு இருக்கிறது. விஜய் புதிதாக வந்திருக்கிறார் தேர்தல் முடிந்த பின்னர் தான் அவரைப்பற்றிச் சொல்ல முடியும்.
கேள்வி : விஜய் பற்றி உங்கள் கணிப்பு என்ன..?
இபிஎஸ் : அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள், நான் முடிவு செய்வது கிடையாது. மக்கள் தான் எஜமானர்கள்.
கேள்வி : உங்கள் கணிப்பில் தவெக எப்படிப்பட்டது?
இபிஎஸ் : எங்கள் கணிப்பு அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக பெரும்பான்மை இடம் கிடைத்து ஆட்சி அமைக்கும்.
கேள்வி : உங்கள் கணிப்பில் தவெகவுக்கு எத்தனை வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? தவெகவுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கு வாய்ப்புக் கிடையாதா?
இபிஎஸ் : எத்தனை முனைப் போட்டி என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் தெரியவரும். எத்தனை சதவிகிதம் ஓட்டு வாங்குவார் என்பதும் சொல்ல முடியாது. அவர் ஒரு தேர்தலையாவது சந்திக்க வேண்டும். அதன்பின்னர் தான் தெரியும். திமுக, அதிமுக, அமமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்டக் கட்சிகள் எல்லாம் பல தேர்தல்களில் போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் பெற்றிருக்கிறார்கள். விஜய் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார், எனவே, தேர்தலுக்குப் பின்னர் தான் தெரியவரும்.
கேள்வி : அம்மாவின் 10 ஆண்டு நினைவு தினம் முடிந்துவிட்டது. அவர் இன்னும் தமிழக அரசியலில் எப்படி உயிர்ப்புடன் இருக்கிறார்?
இபிஎஸ் : எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தார், அதைக் கட்டிக்காத்தவர் புரட்சித் தலைவி அம்மா. எங்களைப் போன்ற சாதாரணமானவர்கள் உங்கள் முன்பு பேசுவதற்குக் காரணமாக இருந்தவர் அம்மா தான். என்னுடைய பாக்கெட் மட்டும் இல்லை, அதிமுக தொண்டர்கள் அனைவரின் பாக்கெட்டிலும் அம்மா அவர்கள் இருப்பார்கள். இருபெரும் தலைவர்கள் எங்களை உருவாக்கியவர்கள். நாட்டுக்காக வாழ்ந்தவர்கள், இறைவனால் நாட்டுக்காக கொடையாகக் கொடுக்கப்பட்டவர்கள் எம்ஜிஆர், அம்மா என்ற இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது மக்கள் தான் வாரிசு. அப்படிப்பட்ட இருபெரும் தலைவர்களை எங்கள் உள்ளத்திலே நிலைநிறுத்தி இருக்கிறோம்.
கேள்வி : அம்மா உங்களுக்குக் கொடுத்த அறிவுரை எதுவும் எங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இபிஎஸ் : எவர் ஒருவரும் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் இயக்கத்துக்கு உழைத்து மக்களுக்கு உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும் என்று போதித்தார் அம்மா. அந்த வழியில் நாங்கள் பின்பற்றுகிறோம், இன்று உங்கள் முன் இருக்கிறோம்.
கேள்வி : வாக்குறுதிகள் புதியதாக பலவற்றை அறிவித்திருக்கிறீர்களே?
இபிஎஸ் : எல்லாம் மக்களுக்குப் பயனுள்ள திட்டம். ஆண்கள் எல்லோரும் பேருந்துகளில் வேலைக்குச் செல்கிறார்கள் அவர்கள் வைத்த கோரிக்கையின் காரணமாகவே அத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதேபோல ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்கள் உரிய நேரத்தில் பணிக்குச் சென்று திரும்ப வேண்டும். பல்வேறு இடையூறுகள் இந்த ஆட்சியில் இருப்பது உங்களுக்குத் தெரியும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத ஆட்சி. அதனால் வாகனம் வழங்கும் திட்டம் அறிவித்தோம்.
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது, திமுக ஆட்சியில் கைவிடப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரப்போகிறது, அப்போது சுமார் 5 லட்சம் மகளிர்க்கு இருசக்கர வாகனம் மானிய விலையில் வழங்கப்படும். 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2016ம் ஆண்டு அம்மா இருக்கும்போது தேர்தல் அறிக்கையில் இதனைக் கொடுத்தார். அம்மா மறைவுக்குப் பின்னர் சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் மகளிர்க்கு இருசக்கர வாகன மானியம் கொடுக்கப்பட்டது. அந்த திட்டத்தை மீண்டும் அறிவித்திருக்கிறோம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.
கேள்வி : இனி வரும் காலங்களில் கூட்டு பிரசாரத்தை நாங்கள் பார்க்கலாமா?
இபிஎஸ் : நிச்சயமாக. இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறோம். பிரதமர் மோடி வரும்போது மீண்டும் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் மேடையில் பேசுவோம். ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டோம்.
கேள்வி : ஓபிஎஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடந்ததா? தினகரன் ஆதரவாளர்கள் இபிஎஸ்க்கு வாக்களிப்பார்களா?
இபிஎஸ்: கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டால் கூட்டணி தர்மம் என்று இருக்கிறது. அனைவருக்கும் மனமாச்சரியம் இருக்கும், கருத்து வேறுபாடுகள் இருக்கும். கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டால் அதையெல்லாம் மறந்து, யார் வேட்பாளர் என்று பார்க்க மாட்டோம். கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெற வைப்பதே எங்கள் இலக்கு. இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. இன்னொன்று, இன்னொரு நபரைப் பற்றிச் சொன்னீர்கள், ஏற்கனவே கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொதுக்குழுவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தினால், அவரை சேர்க்க வழியில்லை.
கேள்வி : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி உங்கள் கருத்து?
இபிஎஸ் : இன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் ஊடகங்களில் வரும் செய்திகளை மக்கள் அறிவார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தமிழகத்தில் 6999 சிறுமிகள் போக்சோவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு 104 கோடி ரூபாய் நிவாரணம் அளித்தோம் என்று சமூகநலத்துறை அமைச்சர் சொல்கிறார். அப்படியென்றால் திமுக ஆட்சியில் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருக்கிறது என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக அமைச்சரே தெரிவித்து இருக்கிறார்.
பெண்களுக்கு முதியவர்களுக்கும் பாதுகாப்பில்லை. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை நடக்கிறது. பலமுறை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம், சட்டமன்றத்திலும் பேசினோம், ஆனால் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர்கள், சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் திமுகவினரே போதைப் பொருட்களை விற்பனை செய்வதால் தடுக்க முடியவில்லை. அதுமட்டுமில்லை, இன்னும் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை.
மூன்று மாதத்துக்கு முன்பாகவே யுபிஎஸ்சிக்கு பட்டியலை அனுப்பி, அவர்கள் மூவரை அனுப்புவார்கள். இதுவரை மூவரில் ஒருவரை நியமிக்கவில்லை. அதோடு பொறுப்பு டிஜிபியை நியமித்தார்கள், அவர் மருத்துவ விடுப்பில் சென்றபோது அவருக்கு ஒரு பொறுப்பு டிஜிபியை நியமித்த அரசு தான் விடியா திமுக அரசு. சட்டம் ஒழுங்கு சீர்குலைய இதுவும் காரணம்.
கேள்வி : பிசியோதெரபி உள்ளிட்டவற்றிலும் நீட் அமல்படுத்தப்படுவதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறாரே?
இபிஎஸ் : முதலில் நீட் தேர்வை கொண்டுவந்தது யார்? 2010 டிசம்பர் 21ம் தேதி காங்கிரஸ் திமுக அரசு இருக்கும்போது, திமுகவை சேர்ந்த காந்தி செல்வன் மத்திய அமைச்சராக இருக்கும்போதுதான் நீட் தேர்வு கொண்டுவந்தார்கள். நாங்கள் எவ்வளவோ போராடினோம் ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், திமுக நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். கொண்டுவந்ததும் அவர்கள் தான் இன்று எதிர்ப்பதும் அவர்கள் தான்.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். துணை முதல்வர் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார். சென்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார், எங்களால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை. வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்த பின்னர் ஏமாற்றி விட்டார்.
கேள்வி : பாஜக தமிழை அழிக்கிறது என்கிறது திமுக. 100நாள் வேலைத்திட்டப் பெயரை மாற்றிவிட்டனர். இந்த சமயத்தில் அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பது அதிமுகவுக்கு டிஸ்அட்வாண்டேஜா?
இபிஎஸ் : மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. நாட்டு மக்கள் நம்புகிறார்கள். இதே திமுக தான் முன்பு பாஜகவோடு கூட்டணி வைத்தது. அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி. அதனால் அவதூறான விஷமத்தனமான கருத்தைப் பரப்பி வருகிறார்கள். இதுதான் உண்மை.
கேள்வி : அப்போது இருந்த பாஜக இவ்வாறு இல்லை என்கிறார்களே?
இபிஎஸ் : இன்றும் பாஜகவுக்கு அதே கொள்கைதான். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை நிலையாக இருக்கும். அதன்படிதான் செயல்படும். திமுகவுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கொள்கையை மாற்றிக்கொள்வார்கள். அதிமுக அப்படியல்ல.
கேள்வி : அதிமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவை எதிர்க்கும் துணிவு இருக்கிறதா?
இபிஎஸ் : ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்துதான் போட்டியிட்டோம். நான் பலமுறை சொல்லிவிட்டேன், உங்கள் அரங்கில் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒரு பொம்மை முதல்வர் நாட்டை ஆள்கிறார் என்பதுதான் உண்மை.
கேள்வி : ஆட்சி அமைந்தால் அதிமுக ஆட்சியா? என்.டி.ஏ ஆட்சியா?
இபிஎஸ் : நாங்கள் கூட்டணி அமைக்கும்போதே உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். மக்களிடம் குழப்பம் ஏற்படுத்த திமுக முயல்கிறது. அதிமுக தலைமை தாங்கும், அரசு அமைக்கும். இப்படியொரு குழப்பம் ஏற்படும் என்பதால் தான் முன்னரே தெளிவுபடுத்திவிட்டோம். திமுகவினரும், கூட்டணியினரும் எடப்பாடி கடையை விரித்துவைத்திருக்கிறார் யாரும் வரவில்லை என்று கிண்டலடித்தனர். இன்று எங்கள் கூட்டணி பலமாகிவிட்டது.
திமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருப்பதை தான் பார்க்கிறோம். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மிகப்பெரிய யுத்தம் நடக்கிறது. அண்மையில் கூட கனிமொழி டெல்லிக்குச் சென்று ராகுல், சோனியாவை சந்தித்தார். அங்கே பூசல் ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுகிறார்கள், அதற்கு திமுகவினர் பதிலடி கொடுக்கிறார்கள். கூட்டணி நிலைக்குமா என்று தெரியவில்லை. ஸ்டாலினும், உதயநிதியும் காங்கிரஸ் கை நழுவிச்சென்றுவிடும் என்று அஞ்சுகிறார்கள்.
கேள்வி : அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்?
இபிஎஸ் : அதனை இந்த அரங்கிலே சொல்ல முடியாது, விரைவில் வெளியிடுவோம். கூட்டணி அமைத்திருக்கிறோம் சுமூகமாக நிலைப்பாடு நடக்கும்.
கேள்வி : 2021 ஃபார்முலா 2026லும் செல்லுபடியாகுமா?
இபிஎஸ் : கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள், என்னென்ன தொகுதிகள் என்று இன்னும் பேசவில்லை. தேர்தல் நெருக்கத்தில் அதுபற்றிப் பேசி அறிவிப்போம்.
கேள்வி : பாஜக 40 சீட்கள் கேட்டதாகச் சொல்கிறார்களே?
இபிஎஸ் : சிலவற்றைச் சொல்ல முடியும் சிலவற்றைச் சொல்ல முடியாது. கூட்டணி அமைத்திருக்கிறோம். எத்தனை இடங்கள் என்னென்ன இடங்கள் என்று பேசி முடிவெடுப்போம்.
கேள்வி : திமுக கூட்டணிக்குள் இருக்கும் பிரச்னைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இபிஎஸ் : ஏற்கனவே குறிப்பிட்டேன். கருத்து யுத்தம் நடக்கிறது. திமுக ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி முழுமையாக தெரியாது. அவர்கள் கூட்டணி நிலைக்குமா, நிலைக்காதா என்று தெரியவில்லை.
525 வாக்குறுதிகள் வெளியிட்டனர். நான்கில் ஒரு பங்கு தான் நிறைவேற்றினர். நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார்கள் செய்யவில்லை, கல்விக்கடன் ரத்து என்றனர், செய்யவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என்றார்கள் குறைக்கவில்லை. எல்லா ரேஷன் அட்டைக்கும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதாக சொன்னார்கள் கொடுக்கவில்லை.
கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுக்கவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. பெயர் வைப்பதில் வல்லவர்கள். பெயரால் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறதா? போட்டோ ஷூட் போட்டு பெயர் வைப்பார்கள், ஒரு திட்டம் அறிவித்து குழு அமைப்பார்கள் 52 குழு போட்டுள்ளனர். அந்த குழுவின் வெள்ளை அறிக்கை கேட்டோம் இதுவரை வெளியிடவில்லை.
கேள்வி : எம்ஜிஆர் பாடலில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது?
இபிஎஸ் : ’நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி.’, ’ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன்..’, ’கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை என மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்’ என்று பெற்றால் தான் பிள்ளையா படத்தில் எம்ஜிஆர் பாடியிருக்கிறார். எங்கள் தலைவர்கள் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள் நல்ல கருத்துகளை மக்களுக்காக சொன்னார்கள். நடிக்கும்போதும் மக்களுக்காகவே நடித்தார்கள் எங்கள் இருபெரும் தலைவர்கள்.
கேள்வி : என்.டி.ஏ வெற்றிபெறுமா?
இபிஎஸ் : ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேன். 210 இடங்களில் என்.டி.ஏ வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
