அதிமுக.வுடன் உறவாடி, அக்கட்சியை அழிக்க பாஜக முயற்சிக்கிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, தஞ்சையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் தமிமுன் அன்சாரி கல்ந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக வுடன் உறவாடி, அக்கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்பது பா.ஜ.க வின் நீண்ட கால திட்டமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலிலதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.,வை அழித்து விட்டு, அந்த இடத்திற்கு வர வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு திராவிடக் கட்சி அழிவை நோக்கி செல்ல தான் விரும்பவில்லை என்று குறிப்பிட்ட தமிமுன் அன்சாரி, பாஜக.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்கக் கூடாது என்பதில் அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.