Thursday, February 5, 2026

பரவும் பறவை காய்ச்சல்., சென்னைவாசிகளே உஷார்! ..அரசு வெளியிட்ட அலர்ட்!

சென்னையில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன. அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்து கிடந்ததால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்த காகங்கள் சேகரிக்கப்பட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. ஆய்வில், H5N1 வைரஸ் தொற்றே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும் துறை தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், காகங்கள் உள்ளிட்ட பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தால், அவற்றை வெறும் கையால் தொடக் கூடாது என்றும், உடனடியாக கால்நடை மருத்துவத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணை உரிமையாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகள் உயிரிழப்புகள் தினந்தோறும் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இறந்து கிடக்கும் காகங்கள், கோழிகள் உள்ளிட்ட பறவைகளை பொதுமக்கள் யாரும் வெறும் கையால் தொடக் கூடாது என்றும், எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அவற்றை கையாள வேண்டாம் என்றும் பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும். அது சாத்தியமில்லாத பட்சத்தில் எரிக்க வேண்டும். இதுவும் செய்ய முடியாத நிலையில், அருகிலுள்ள கால்நடை மருத்துவத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

H5N1 வைரஸ் காரணமாக ஏற்படும் பறவைக் காய்ச்சல், மனிதர்களுக்கு எளிதில் பரவாது என்றாலும், பாதிப்பு ஏற்பட்டால் அது தீவிரமாக மாற வாய்ப்புள்ளது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, தலைவலி ஆகியவை தோன்றலாம்.

சிலருக்கு கண்கள் சிவத்தல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் ஏற்படக்கூடும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Related News

Latest News