இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-ஐ நம்பி இருக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சிச் செய்தி காத்திருக்கிறது. கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியிலிருந்து, BSNL நிறுவனத்தால் நாடு முழுவதும் ஒரு புது சிம் கார்டைக் கூட விற்க முடியவில்லை. இதனால், புது கனெக்ஷன் வாங்க நினைப்பவர்களும், சிம் கார்டு தொலைந்துபோய், டூப்ளிகேட் சிம் வாங்க நினைப்பவர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த திடீர் முடக்கத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தால், ஒரு நம்ப முடியாத, ஒரு காரணம் வெளிவந்துள்ளது. BSNL நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்குப் புது சிம் கார்டு கொடுப்பதற்கும், அவர்களின் KYC விவரங்களைப் பதிவு செய்வதற்கும், ‘சஞ்சார் ஆதார்’ என்ற ஒரு செயலியை (App) பயன்படுத்தி வருகிறது. இந்தச் செயலியை உருவாக்கிய தனியார் நிறுவனத்திற்கு, BSNL கடந்த நான்கு மாதங்களாகப் பணம் கட்டவில்லையாம்.
இதனால், கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி சேர்ந்ததால், அந்தத் தனியார் நிறுவனம், நவம்பர் 30-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் முடிந்தவுடன், நள்ளிரவோடு அந்தச் செயலியை நிறுத்திவிட்டது. இந்த ‘சஞ்சார் ஆதார்’ செயலி முடங்கியதால், BSNL ஊழியர்களால் எந்த ஒரு புது சிம் கார்டையும் ஆக்டிவேட் செய்ய முடியவில்லை. இதனால், நாடு முழுவதும் உள்ள BSNL அலுவலகங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு வருபவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஏற்கனவே, தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறி வரும் BSNL, இப்போது இந்த புதிய பிரச்சனையால், புதிதாக வரும் வாடிக்கையாளர்களைக் கூட இழந்து, மேலும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்காக, BSNL நிறுவனமே இப்போது சொந்தமாக ஒரு புதிய செயலியை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் உள்ள BSNL-இன் IT குழு, இந்த புதிய செயலியை உருவாக்கி வருவதாகவும், கூடிய விரைவில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த சிம் கார்டு பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படும் என்றும் BSNL வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதுவரை, BSNL வாடிக்கையாளர்கள் பொறுமை காப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதே தற்போதைய கசப்பான உண்மை.
