மேற்காசிய பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பி.என்.ஜி (PNG) எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு உள்ள வீடுகளுக்கு வீட்டு LPG சிலிண்டர் வழங்குதல் மற்றும் மீண்டும் நிரப்புதல் ஆகியவற்றை தடைசெய்யும் வகையில் மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதற்கிணங்க, ஏற்கனவே PNG இணைப்பைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு அரசு எண்ணெய் நிறுவனங்கள் புதிய LPG இணைப்புகள் வழங்குவதையும், சிலிண்டர் ரீஃபில் செய்வதையும் தடை செய்யப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் எல்பிஜி அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவைகளில் சுமார் 90 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.
நாட்டில் தற்போது சுமார் 1 கோடியே 50 லட்சம் வீடுகளில் PNG இணைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், PNG வசதி உள்ள பகுதிகளில் இருக்கும் சுமார் 60 லட்சம் வீடுகள் LPG பயன்படுத்துவதிலிருந்து PNG இணைப்புக்கு மாற வேண்டும் என பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
