திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட மருவத்தூர் ஊராட்சியில் உள்ள பேட்டை கிராம மக்கள், அடிப்படை சாலை வசதி இல்லாத காரணத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நீண்ட காலமாகச் சீரமைக்கப்படாமல் பழுதடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.
தற்போது சாலைகள் சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் கூட கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், சேறும் சகதியுமான பாதையில் நடந்து சென்று படிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
கிராமத்தில் யாருக்காவது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவசர மருத்துவ உதவிக்காகக் கூட வாகனங்கள் விரைந்து வர முடிவதில்லை. இதனால், நோயாளிகளைப் பழுதடைந்த சாலை வழியாகத் தூக்கிக்கொண்டு பிரதான சாலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது.
எனவே நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தச் சாலைப் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
