ரேஷன் கார்டுதாரர்களுக்கு எச்சரிக்கை.. அரசின் முக்கிய நடவடிக்கை.. நோட் பண்ணிக்கோங்க..

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக இந்த திட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், இலவச அரிசி உள்ளிட்ட சலுகைகளை தொடர்ந்து பெற ரேஷன் அட்டைத்தாரர்கள் முக்கியமான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகை (பயோமெட்ரிக்) விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்பு நடவடிக்கை, போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து நீக்கவும், பொது விநியோகத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும், அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கே சென்றடைவதை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயோமெட்ரிக் சரிபார்ப்பை நிறைவு செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, முதலில் தங்களது ரேஷன் கடையை அணுகி, பயோமெட்ரிக் புதுப்பிப்பு அவசியமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இந்த நடைமுறை தேவையில்லை என்பதால், ரேஷன் கடை அதிகாரிகளிடம் நேரடியாக விசாரிப்பது முக்கியம்.

வேலை அல்லது பிற காரணங்களால் வெளியூரில் தங்கியிருப்பவர்களும் தங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடையை அணுகி தேவையான தகவல்களை பெறலாம். மேலும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் உயிரிழந்திருந்தால், அவர்களின் பெயர்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகலாம் அல்லது ரேஷன் கடை விற்பனையாளரிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அதேபோல், tnpds இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி உள்ளது.

எனவே, ரேஷன் அட்டைத்தாரர்கள் தங்களது குடும்ப அட்டையின் விவரங்களை சரிபார்த்து, தேவையான பயோமெட்ரிக் புதுப்பிப்பு மற்றும் உறுப்பினர் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்வது அவசியமாகும்.

Related News

Latest News