ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க!

தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் சனிக்கிழமை, அதாவது ஜூன் 13-ஆம் தேதியை இப்போதே உங்கள் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், உங்கள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க தமிழ்நாடு அரசு ஒரு சூப்பர் வாய்ப்பை வழங்கப்போகிறது.

பொதுவாகவே தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்களை வாங்கும் அட்டை மட்டுமல்ல; அது மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு என அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கான ஒரு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. உங்கள் கார்டில் முகவரி அல்லது தொலைபேசி எண் அப்டேட்டாக இல்லை என்றால், அரசின் சலுகைகள் உங்களுக்குக் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். குறிப்பாக, இலவச அரிசித் திட்டத்தை தொடர்ந்து பெற ‘கேஒய்சி’ (KYC) எனப்படும் விபரங்களைப் புதுப்பிப்பது இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஜூன் மாதத்திற்கான மக்கள் குறை தீர்ப்பு முகாம் வரும் ஜூன் 13, சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் நடைபெற இருக்கிறது. சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் துறையின் 19 மண்டல அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில் உள்ள வட்ட அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தச் சிறப்பு முகாம் நடைபெறும்.

இந்த முகாமில் நீங்கள் என்னென்ன செய்யலாம் தெரியுமா? உங்கள் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயரைச் சேர்க்கலாம், வேண்டாத பெயர்களை நீக்கம் செய்யலாம், முகவரி மாற்றம் அல்லது செல்போன் எண் மாற்றம் போன்ற திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். இது தவிர, இதுவரை ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய கார்டு கோரியும் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, ரேஷன் கடைக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வாங்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்குப் பதிலாக, மற்றொருவர் பொருட்களைப் பெறுவதற்கான ‘அங்கீகாரச் சான்று’ இந்த முகாம்களில் உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களிலோ அல்லது மற்ற நேரங்களிலோ இதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து லீவு போட்டுச் செல்ல வேண்டிய அவசியமில்லை. சனிக்கிழமை நடைபெற உள்ள இந்த முகாமிற்குச் சென்றால், உங்கள் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து வேலைகளையும் ஒரே நாளில் முடித்துவிடலாம்.

எனவே, இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். உங்கள் ரேஷன் கார்டை அப்டேட்டாக வைத்திருங்கள், அரசின் நலத்திட்டங்களைத் தடையின்றிப் பெறுங்கள்.

Related News

Latest News